கொடுப்பனவுகள் மீதுள்ள ஈடுபாடு கொன்று புதைக்கப்பட்ட மக்கள் மீது இல்லை: கேள்விக்குறியாகும் செம்மணி !
ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அராசாங்கம் வழங்கிய பலதரப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுவது காணாமல் ஆக்கப்பட்ட மக்களை உரிய உறவுகளிடம் ஒப்படைப்பது என அவர் தெரிவித்த விடயம்.
தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்த அனைத்து பிரசார நடவடிக்கைகளிலும் பெரும்பாலும் அந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்த பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இருக்கின்றார்களா ? இல்லையா ? அவர்களுக்கு என்ன நடந்தது என செம்மணியில் அகழப்படும் எலும்புக்கூடுகளை பார்த்த மக்கள் பரிதவிக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பில் சிவில் சமூக செய்ற்பாட்டாளர் ரஜனி ஜெயபிரகாஷ் (Rajini Jayaprakash) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஆளனி பற்றாக்குறை, வினைத்திறனான சேவை வழங்க முடியாமை மற்றும் காணாமலாக்கப்ட்ட உறவுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத சட்ட ஏற்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசுவம நலன்புரி திட்டத்திற்கு 372 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் முடிகின்றது.
இவ்வாறு தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை தாண்டி பல வேலைகளை நடத்துவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கின்றது ஆனால் காணாமல் போன உறவுகளுக்காக ஒரு அடியெடுக்க அவர்களால் முடியவில்லை.
குறித்த நடவடிக்கைகளை பார்க்கும் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான முறையான நீதி அவர்களிடம் இருந்து கிடைக்காது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
வறுமையில் வாழும் மக்களுக்கு உதவி தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனது சொந்தங்களை தொலைத்து காலம் காலமாய் கண்ணீர் விட்டு வேதனையில் வாடும் மக்களுக்கு சரியான நீதியினை பெற்று கொடுப்பதும் அரசின் தலையாய கடமை இருப்பினும் அது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகத்ததான் உள்ளது.
இவ்வாறு காணாமலாக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, தமிழ் மக்களின் உரிமை கோரல், செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரின் விஜயத்தின் அடுத்த கட்டம் என்பவை தொடர்பில் ரஜனி ஜெயபிரகாஷ் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
