வடக்கு மாகாணம் மீதான அநுர அரசின் அளவு கடந்த கரிசனை! ஆளுநர் எடுத்துரைப்பு
போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இவ்வாறானதொரு அக்கறை இதுவரை காண்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று திங்கட்கிழமை (26.01) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாணப் பொருளாதாரம்
இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.
அதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளே காணப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து இவை மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்றன.

இவற்றை வடக்கிலேயே பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் எம்மிடம் இல்லை. இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இந்தியாவுடனான விமானச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளமையால் வடக்குக்கு வரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்ட பின்னர், நிச்சயமாக அதிகளவான சுற்றுலாவிகள் வருகை தருவார்கள். இதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியடையும்.
முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிடுவதற்குச் சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. அரசாங்கத்தால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட 'வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு' முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சாதகமான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நட்புணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அந்த ஒப்பந்தத்தின் கீழான செயற்பாடுகளை மீளவும் வலுப்படுத்துவது தொடர்பில் கரிசனை செலுத்துமாறு அவர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |