சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை! சஜித் தரப்பின் அடுத்த நகர்வு
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தயாராகியுள்ளது.
அதன்படி, குறித்த பிரேரணையை விரைவில் கட்சித் தலைமை மற்றும் பிற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் முன்வைப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனும் நம்பிக்கையில்லா பிரேரணையை தயாரிக்கப் பணியாற்றுவதாக அவர் கூறியுள்ளார்.
காரணம்
நாடாளுமன்றத்தின் துணைச் செயலாளர் நாயகமும், தலைமைப் பணியாளருமான சட்டத்தரணி சமிந்த குலரத்னவின் சேவைகளை இடைநிறுத்தியது மற்றும் பாரபட்சமான நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிய அவர்கள் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், சில காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
முழுமையாக ஆதரவு
இது குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை முழுமையாக ஆதரிப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக ஏற்கனவே நம்பிக்கையில்லா தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |