பிரம்மிக்க வைக்கும் புலமைப்பரிசில் பெறுபேறு! முன்னாள் போராளியின் மகன் சாதனை(காணொளி)
2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தது.
நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களது விபரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அப்படி, ஒரு சிறந்த பெறுபேற்றுக்கு உரித்துடையவர்தான் சிவகுமார் கஜன் என்னும் விசேட தேவையுடைய சிறுவன். நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 91 புள்ளிகளை இந்த சிறுவன் பெற்றுக் கொண்டுள்ளார்.
தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி
ஒட்டுச்சுட்டான் - சின்ன சாளம்பை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரின் மகன்தான் இந்த கஜன்.
இவர்கள் தொடர்பான விபரங்களை இதற்கு முன்னர் எமது உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக நாங்கள் வெளிக்கொண்டு வந்திருந்தோம்.
15 வருடங்களாக தாயகத்தின் மீட்புக்காக களமாடி, இன்று உடல் முழுதும் காயங்களுடன் வாழ்க்கையை கொண்டு நடத்தும் முன்னாள் போராளி ஒருவரின் மூத்த மகன்தான் இந்த சிறுவன்.
தான் புலமைப் பரிசில் பரீட்சை எழுதியதையும், பெறுபேறுகளுக்காக காத்திருப்பதையும் தன்னம்பிக்கையோடு எமது உறவுப் பாலம் நிகழ்ச்சியூடாக கஜன் எம்மோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.
தான் மிக அதிக நண்பர்களை கொண்டவர் என்றும், தனக்கு ஆறு வயதில் தம்பி ஒருவர் இருப்பதாகவும் கஜன் தெரிவித்திருந்தார்.
படிப்பதில் மிக ஆர்வத்தை வெளியிட்ட கஜனின் இந்த பெறுபேறு அனைவரையும் வியக்க வைப்பதாய் உள்ளது.