சதித்திட்டம் நடந்ததா..! வெளியான தரம் 6 பாடத்திட்டத்தின் சிக்கலுக்கான காரணம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் இது கண்டறியப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (19) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
"இது பற்றி விசாரணை செய்ய தேசிய கல்வி நிறுவகத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதற்கமைய 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவர்களில் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் தற்போது அமுலில் உள்ளன.
புத்தகமொன்றை அச்சிடும்போது 12 தடவைகள் இது சோதிக்கப்படும். அதன் பின்னர் மூன்று தடவைகள் ஒப்புநோக்கப்படும்.
அதன் பின்னர் NIE இனால் ஒப்புநோக்கப்படும். அதன் பின்னர் அச்சிடுவதற்கு முன்னர் இறுதிப் பிரதி சோதிக்கப்படும்." என்றார்.
உரிய அதிகாரிகளின் தகைமைகள்
"சதித்திட்டம் நடந்ததா என்று தேடுவது மிகவும் தர்க்கரீதியானது. இந்த முழுச் செயல்முறையையும் பின்பற்றாமல் கடைசி நேரத்தில் செய்த திருத்தமே என்பதே விசாரணை முடிவாக உள்ளது.

இந்தச் செயல்முறை ஊடாகவே தொகுதி (Modules) செய்யப்பட்டுள்ளன, ஆனால் கடைசி நேரத்தில் செய்த திருத்தம் இந்தச் செயல்முறை ஊடாகச் செல்லவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
உரிய அதிகாரிகளின் தகைமைகள் போதுமானதாக இல்லாத போதிலும் அவர்களுக்குத் தேசிய கல்வி நிறுவகத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |