பேரனுடன் வீதியில் நடந்து சென்ற பாட்டிக்கு நேர்ந்த துயரம்
பஸ்யால கிரியுல்ல வீதியின் இடிபரபே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீரிகம இடிபரபே பகுதியைச் சேர்ந்த ஈ.எம். சந்திரலதா என்ற அறுபது வயது மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாட்டியை மோதி தள்ளிய வாகனம்
நேற்றையதினம் (21) இவர் தனது 11 வயது பேரனுடன் ஏதோ தேவைக்காக வீதியில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் பெண் ஒருவர் கிரியுல்ல நோக்கி ஓட்டிச் சென்ற கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி பாட்டியை மோதி தள்ளியுள்ளது. மற்றும் பேரன் சுமார் 20 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டான்.
பின்னர் கால்வாய்க்கு அருகில் உள்ள கதவு சுவரில் அடிபட்டு வாகனம் நின்றுவிட்டது.
மீரிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி மற்றும் பேரன் பிரதேசவாசிகளின் துணையுடன் மீரிகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக மீரிகம காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த பேரன் மீரிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காரை ஓட்டிச் சென்ற பெண் பிலியந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் சில வேலைகளுக்காக மஹவ பிரதேசத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காரை ஓட்டிச் சென்ற பெண் மீரிகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
