உணவிற்கு அல்லாடும் மக்கள்- தப்பியோடியவருக்கு அதி பயங்கர பாதுகாப்பு -மரிக்கார் குற்றச்சாட்டு
மூன்றுவேளை உணவு கிடைக்காத மக்கள்
நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்காத நிலையில் நாட்டை விட்டு ஓடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அதிபயங்கர பாதுகாப்புடன் கூடிய சுப்பர் ஹவுஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தப்பிச் சென்றவருக்கு அதிபயங்கர பாதுகாப்பு
நாடு தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.இந்தவேளை மக்கள் நாளாந்தம் உணவிற்கே அல்லல்படுகின்றனர்.ஆனால் மக்களின் போராட்டத்தை அடுத்து நாட்டை விட்டே தப்பிச் சென்ற முன்னாள் அதிபர் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இவ்வாறு வருகை தந்த அவருக்கு அதிபயங்கர பாதுகாப்புடன் கூடிய சுப்பர் ஹவுஸ் ஒன்றை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டை விட்டு தப்பிய கோட்டாபய மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவருக்கு சூப்பர் கார், சூப்பர் அரச அடுக்குமாடி குடியிருப்பு அதிபயங்கர பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை நாடு திரும்பிய கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.