கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: முன்னாள் எஸ்டிஎப் வீரர் அதிரடி கைது!
புதிய இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் கைதான சந்தேகநபர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் லெப்டினன்ட் தர அதிகாரி என தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக சீதுவ மற்றும் கல்கிஸை காவல் பிரிவுகளில் ஏழு கொலைகளைச் செய்த நபர் இவர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் பாலவிய பகுதியில் சொகுசு வானில் பயணித்துக் கொண்டிருந்தபோது காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
நான்காம் இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் புத்தளம் பாலவிய பகுதியில் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, முகமது அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் நாடாளுமன்றில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞராக ஆண் ஒருவர் உட்பட வழக்கறிஞராக பெண் ஒருவரும் மாறுவேடமிட்டு வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் வாங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று(19) காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிதாரி தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
சில நிமிடங்களுக்கு முன்பு கொழும்பு (Colombo) - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கணேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்போது, வழக்கறிஞர் வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கணேமுல்ல சஞ்சீவ மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரை தேடும் பணியை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



