அர்ச்சுனா எம்.பியின் பதவி குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் பதவியை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, மனுவில் கோரப்பட்டுள்ள படி, அர்ச்சுனா நாடாளுமன்றில் அமர்வதையும் வாக்களிப்பதையும் தடுக்க இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
மனுதாரரின் குற்றச்சாட்டு
குறித்த விசாரணையானது, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோரின் அமர்வு முன்னிலையின் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்படி, மனுதாரரான புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்றும் அவர் ஒரு அரசு வைத்தியராக பணியாற்றி வந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாக நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஆகையால் அவருக்கு நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
மனு மீதான விசாரணை
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பாக முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இல்லாமல் இடைநிறுத்தப்பட்டிருந்தமையால் அந்த நேரத்தில் அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, இந்த விசாரணைக்கு அனுமதி வழங்கி மனு மீதான விசாரணையை ஓகஸ்ட முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
