புலம்பெயர் நாடொன்றில் புதுவிதமான மரணத்தைச் சந்தித்த யாழ் கலைஞன்!
அவரது பெயர் ரமேஷ் வேதநாயகம்.
ஈழத் தமிழ் கலைஞர்கள் வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு திறமைசாலி.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் பிறந்த இவர் பிரித்தானியாவில் நீண்ட காலம் வசித்து வந்ததுடன், தென் இந்தியத் திரைப்படங்கள் உட்பட ஏராளமான திரைப்படங்கள், குறும்படங்கள், மேடை நாடகங்கள் என்று தனது கலை ஆளுமையால் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒரு கலைஞன்.
IBC-தமிழ் தொலைக்காட்சியிலும் இவரது ஏராளமான கலைப் பங்களிப்புக்கள் இருக்கின்றன.
இவருக்கு யாராலும் குணப்படுத்தமுடியாத ஒரு நோய் இருக்கின்றது என்று கேள்விப்பட்டபோது புலம்பெயர் தமிழ் கலை உலகமே அதிர்ந்தது.
Motor Neuron Disease (MND) என்ற பெயரில் மரணம் அவரை நெருங்கியபோது, அதற்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
கலைப்பணியாற்றிக்கொண்டே நிச்சயமாகிவிட்ட அந்த மரணத்துடன் போராடினார். சிரித்துக்கொண்டு போராடினார்.
ஈழத்தமிழர்களின் தலைசிறந்த ஒரு கலைஞனை தின்றுதீர்த்த அந்தக் கொடிய நோய்க்கு எதிரான புலம்பெயர் இளைஞர்களின் போராட்டம்தான் கீழே இணைக்கப்பட்டுள்ள ஒளியாவனம்.
ரமேஷ்க்கு ஏற்பட்ட Motor Neuron Disease (MND) என்ற இந்தக் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இதுவரை மாற்றுச் சிகிச்சை முறை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்ற இந்த நோய்க்கு மேலதிக ஆராய்ச்சிகள் செய்ய தேவையான நிதி உதவிகளை திரட்டுவதையும் நோக்காகக் கொண்டு ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளார்கள் புலம்பெயர் இளைஞர்கள்.
விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சஜித் பகீரதன் இயக்கிய இந்த உணர்வுபூர்வமான ஆவணப்படம், ரமேஷின் போராட்டத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிக்கொணர்கிறது. அத்துடன் அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எதிர்கொண்ட ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் தார்மீக கஷ்டங்களையும எடுத்துக்காட்டுகின்றது.
ரமேஷின் உடைக்க முடியாத மனப்பான்மையையும், நீடித்த மரபை விட்டுச் செல்வதற்கான உறுதியையும் இக்குறும்படம் அழகாக விளக்குகின்றது.
ஒரு புலம்பெயர் கலைஞனின் வாழ்க்கையை மாத்திரமல்ல அவனது ஓர்மத்தையும் வெளிக்காண்பிக்கின்ற எமது இளம் தலைமுறையினரின் இந்த முயற்சியை, ஒரு இனமாக உற்சாகப்படுத்தவேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் கடமை.
இந்தக் குறும்படத்தை எமது தளங்களில் வெளியிடுவதில் பெருமை கொள்கின்றது IBC-தமிழ் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
