ரத்து செய்யப்படும் சாரதி அனுமதி பத்திரங்கள்: வழங்கப்படவுள்ள கால அவகாசம்
காலாவதி திகதி அற்ற கனரக வாகனம் உள்ளிட்ட ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்கள் இவ்வருட இறுதிக்குள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்தவகையில், புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெறுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள (DMT) ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க (Nishantha Anuruddha Weerasinghe) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "கனரக வாகன உரிமம் வைத்திருக்கும் நபர்களின் உடல் தகுதி கடந்த காலங்களில் முறையாக சோதிக்கப்படவில்லை.
போதிய உடற்றகுதியின்மை
இது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கின்றது, ஏனெனில் போதிய உடற்றகுதியின்மை, அவர்கள் பாதுகாப்பாக ஓட்டுவதற்கும் வாகனத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் அவர்களின் திறனை பாதிக்கும், இது விபத்துக்கள் அல்லது பிற பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
எவ்வாறாயினும், அவர்களின் புதிய ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை காலாவதி திகதியுடன் பெற அடுத்த ஆண்டு முதல் ஆறு மாத கால அவகாசம் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவெடுத்துள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேற்படி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் புதிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மருத்துவச் சான்றிதழை மாத்திரம் கொண்டு வருமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டார்.
வாகன ஓட்டுனர்
குறிப்பாக, 1.1 மில்லியன் கனரக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்களும் 1.2 மில்லியன் சாதாரண ஓட்டுனர் அனுமதிப்பத்திரங்களும் காலாவதி திகதி அற்று காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அச்சிடப்பட முடியாமல் இருந்த 800,000 ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்கள் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும், அவை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |