முற்றுகையிடப்பட்ட படகில் 4.2 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
புதிய இணைப்பு
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட மீன்பிடிப் படகில் காணப்பட்ட போதைப்பொருளின் அளவு 189 கிலோ கிராமிற்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த மீன்பிடிப் படகில் இருந்து 132 கிலோ 026 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 57 கிலோ 220 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இதன் சந்தைப் பெறுமதி 4.2 பில்லியன் ரூபாய் என கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதன்போது குறித்த மீன்பிடிப் படகில் இருந்த ஐந்து கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த போதைப்பொருள் தொகுதியானது 'தெஹிபாலே மல்லி' என்பவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கடற்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த போதைப்பொருள் தொகுதியின் சந்தைப் பெறுமதி 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
கடற்படையினரால் பொறுப்பேற்பு
விசேட கடற்படை நடவடிக்கையின் போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளில் கடத்திச் சென்ற உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து நேற்று (04) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
இதன்போது 5 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களும் இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் இன்று காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பிரதி பாதுகாப்பு அமைச்சர், நாட்டிலிருந்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் செய்யக்கூடிய அனைத்தையும் நிறைவேற்றுகின்றது.
கடற்படையினருக்கு விசேட நன்றி, கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது, அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு காவல்துறையினருக்கும் முப்படைகளுக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் கடற்படையினர் மட்டுமே 75 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளதுடன், முழு நாடும் ஒன்றாக திட்டத்தின் கீழ் 109 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைத் கைப்பற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள்
2026 ஆம் ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் மட்டும் 69 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கடற்படையின் நடவடிக்கைகளின் மூலம் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போதைப்பொருள் சோதனைகளில் 314,200 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 1,050 பேர் முக்கிய உறுப்பினர்கள் ஆவார்.

கடற்படையினரால் போதைப்பொருட்களுடன் கூடிய 63 படகுகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. அவற்றுள் 11 நெடுநாள் படகுகள் அடங்குவதுடன் 353 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்து நிறுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம். கடத்தல்காரர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து தப்பிக்க வழியில்லை, நாட்டின் எதிர்காலத்தைக் தீர்மானிப்பது கடத்தல்காரர்கள் அல்ல, பொதுமக்களே.
இதற்கிடையில், 1818 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் வழங்குங்கள்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |