சட்டவிரோத துப்பாக்கிகள், T-56 ரவைகள் மற்றும் 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது
போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத துப்பாக்கிகள், T-56 துப்பாக்கி ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேகநபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5 டி-கட்டா ரக துப்பாக்கிகள், 2 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கல்கட்டா ரக துப்பாக்கிகள், 4 T-56 துப்பாக்கி மகசின்கள், 95 T-56 ரவைகள், பல்வேறு வகையான 436 உயிருள்ள ரவைகள் மற்றும் 2 ஜோடி கைவிலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ மற்றும் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு நடவடிக்கையின்போது, கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 5 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, வெலிவேரிய, வெபட பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல்கள் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஹெரோயின், துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவரை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி பெற்றுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |