போர்நிறுத்தத்திற்கு மத்தியில் ஹிஸ்புல்லாவின் வான்படை தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்
இஸ்ரேல்(israel) மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள செய்தியில், ஹிஸ்புல்லா வான் படையின் தலைவர் மற்றும் துணை தளபதியான ஜாபர் அலி சமஹா பெய்ரூட் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்து உள்ளது.
ஹிஸ்புல்லா வான் படை
ஈரானின்(iran) தலைமையின் கீழ், ஹிஸ்புல்லா வான் படை நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த படைப்பிரிவுக்கு ஆளில்லா விமானங்கள், ரொக்கெட்டுகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவை ஈரானிடம் இருந்து கிடைத்து வந்துள்ளன என கூறியுள்ள இஸ்ரேல் இராணுவம், அந்த பிரிவில் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த ஆயுதங்கள் எல்லாம் லெபனானில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு வந்துள்ளன என்றும் தெரிவித்தது.
ஆயுத கிடங்குகள் தாக்கி அழிப்பு
ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய கடந்த செப்டம்பர் 23-ஆம் திகதியில் இருந்து, இந்த வான் படை பிரிவுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட பகுதிகளை தாக்கி அழித்துள்ளது.
அவற்றில் ஆளில்லா விமானங்களை ஏவும் 150 தளங்கள், 30 கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் 4 ஆயுத தொழிற்சாலைகளும் அடங்கும். இந்த தாக்குதலில் 70 சதவீதம் வரை பயங்கரவாத அமைப்புகளின் ஆயுத கிடங்குகள் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளன என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த தகவலை இஸ்ரேல் வெளியிட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |