ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிப்பு!
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவிற்கமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா(Hejaaz Hizbullah) இன்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தளம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டுமென மேல் நீதிமன்ற நீதிபதி மாலினி அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புத்தளம் பகுதியிலுள்ள மதரசா ஒன்றில் மாணவர்களுக்கு அடிப்படைவாதத்தை கற்பித்தமை தொடர்பில் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு கிடையாது என அறிவித்துள்ளது.
இதற்கு எதிராக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, பிணை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுமார் 2 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்து இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
