கட்டுப்பாடுகளை தளர்த்த சிறிலங்கா நாடாளுமன்றம்..! வெளியான புதிய அறிவிப்பு
நாட்டில் நிலவிய கொரோனா சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் நேற்று (14) அனுமதிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான விண்ணப்பங்கள்
இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வு அல்லாத நாட்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணிவரை (விடுமுறை நாட்கள் தவிர்ந்த) நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கான விண்ணப்பங்களை கடிதம், தொலைநகல் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களின் மாணவர் குழுக்கள், அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்தார்.