இரண்டு வருடங்களின் பின்னர் -கனடாவில் மீண்டும் களைகட்டும் தமிழ் தெருவிழா
கனடாவின் தமிழ் தெருவிழா
கொவிட் பெருந்தொற்று காரணமாக கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கனடாவின் தமிழ் தெருவிழா மீண்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கனடாவின் ஸ்காப்ரோவின் மார்க்கம் வீதியில் இந்த தெருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இந்த மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆசியாவிற்கு வெளியே மாபெரும் தமிழ் நிகழ்வு
தென் ஆசியாவிற்கு வெளியே நடைபெறும் மாபெரும் தமிழ் நிகழ்வாக இந்த தமிழ்தெருவிழா கருதப்படுகின்றது. கடந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்தெரு நிகழ்வில் சுமார் 250,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்வில் உள்ளுரில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட உணவுக்கடைகள் மற்றும் ரெஸ்டுரன்ட்கள் உணவு விற்பனை செய்ய உள்ளன. இந்திய மற்றும் இலங்கையின் புகழ்பூத்த இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.மொத்தமாக 300 கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவையான உணவுகளை ருசி பார்க்கலாம்
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட நிமாஷ் கரீம் பிரபல உணவுக் கடையொன்றை நடாத்தி வருகின்றார். பாய் பிரியாணி என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவுக் கடையின் சுவையான உணவுகளையும் நிகழ்வில் ருசி பார்க்க முடியும்.
இலங்கை ஸ்டைலிலான பிரியாணி மற்றும் டொல்பின் கொத்து என்பனவற்றுடன் வட்டலப்பமும் இந்த உணவுக்கடையின் சிறப்பு அம்சங்களாகும்.
