யாழ் கல்லூண்டாயில் பற்றி எரிந்த குப்பை மேடு!
யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (20-01-2026) மாலை இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் குப்பை மேடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
தீயணைப்பு வாகனம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த குப்பை மேடு தீப்பற்றி எரிவது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்குத் தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் அப்பகுதிக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டுள்ளனர்.
இதையடுத்து, யாழ். மாநகர சபைக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது குப்பை மேட்டின் பல இடங்களில் பரவலாகத் தீ வைக்கப்பட்டிருந்ததால், அதனை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறித்த குப்பை மேடானது இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இப்பகுதியில் யாழ். மாநகர சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகக் கடமையில் இருக்கின்ற நிலையில், வெளியில் இருந்து எவரும் உள்ளே செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குப்பை மேட்டுக்கு அண்மையில் வசிக்கும் மக்களும், கல்லூண்டாய் வீதியூடாகப் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பொதுமக்களும் இவ்வாறான தொடர்ச்சியான தீ விபத்துச் சம்பவங்களால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



