இலங்கை தொடர்பில் பிரித்தானியா கடும் விசனம்
இலங்கை தற்போது கடுமையானதொரு அரசியல் கொந்தளிப்பில் மூழ்கிவரும் நிலையிலும் ராஜபக்ச அதிகார மையத்துக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் இன்று ஐ.நா மனித உரிமைப்பேரவையில் இலங்கையை மையப்படுத்திய விவாதம் இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையிடலை மையப்படுத்தி இன்றைய விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
இன்று காலை இடம்பெற்ற இந்த விவாதங்களில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து பிரித்தானியா கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது.
பிரித்தானியா முன்வைத்த விமர்சனங்கள் வருமாறு,
“பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாதமை தொடர்பில் நீங்கள் வெளியிட்ட கரிசனையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
பல அடையாள மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் நாம் வருத்தம் தெரிவிக்கிறோம்.
ஆனாலும், அஹ்னாஃப் ஜஸீம் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஒரு நேர்மறையான முதல் படி என்ற அடிப்படையில் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஆரம்ப சீர்திருத்தங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், அவை போதுமான அளவு மேற்கொள்ளப்படவில்லை.
குடிசார் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல், குடிசார் அரசாங்க செயற்பாடுகளை இராணுவமயமாக்குதல் பற்றிய கரிசனைகள் எங்களுக்கு உள்ளன.
குறிப்பாக முக்கிய அடையாள வழக்கில் பெயரிடப்பட்ட தனிநபரை மாகாண ஆளுநர் பதவிக்கு நியமித்திருப்பது கவலையளிக்கிறது.
இழப்பீடுகள் மற்றும் காணாமற்போனோர் தொடர்பான அரசாங்க நிறுவனங்களில் நடந்து வரும் பணிகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், இது ஒரு விரிவான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையுடன் இணைந்திருப்பது மிகவும் முக்கியமானது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகளுடன் சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதை நாங்கள் கரிசனையுடன் கவனிக்கிறோம்” எனக் கூறப்பட்டது.
