அப்பாவிடம் மீண்டும் திரும்பி வந்துவிட்டேன் - அமைச்சர் ஹரின் நெகிழ்ச்சி
அப்பாவிடம் திரும்பி வந்துவிட்டேன்
மீண்டும் தனது தந்தையிடம் திரும்பி வந்தததைப்போல் உணர்வதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அரசியல்வாதிகள் தமது அரசியல் கட்சிகளை விட நாட்டை முன்னிறுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
ரணில் விக்கிரமசிங்கவின் பயணமல்ல
“நாட்டில் ஸ்திரத்தன்மையை மக்கள் கேட்கின்றனர். இது ரணில் விக்கிரமசிங்கவின் பயணமல்ல, இது நாட்டின் பயணம். எனவே தனியான அரசியல் கட்சிகள் அல்ல, ஒரு தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய உதவிய அதிபர் ரணிலுக்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நன்றி தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் தலைமையில் பிரிந்து சென்ற ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்டவர். எனினும் அதிபராக ரணில் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து சஜித்தை புறக்கணித்து ரணிலின் அமைச்சரவையில் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.