மாவட்ட செயலகத்தை இழுத்து மூடுவேன் - ஆணவப் பேச்சில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!
புதிதாக வந்த அரசாங்க அதிபரை நான் இதுவரை சந்திக்கவில்லை ஆனாலும் வரவேற்கின்றேன் வாழ்த்துகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அண்மையில் எனது பிரத்தியேக செயலாளர், இந்த மாவட்ட மக்களது வாழ்வாதார உதவி திட்டத்தை எனது அமைச்சின் ஊடாக செய்வதற்கான அனுமதி கடிதத்தை வாங்க சென்ற போது, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற நான், என்ன அமைச்சர் என்று கேட்டுள்ளார்.
மக்களுக்காகவே நாம்
உங்களுக்கு தெரியாவிட்டால் இணையத்தில் போய்த் தேடிப் பாருங்கள் என்று என்னுடைய செயலாளர் அவருக்கு கூறி இருக்கின்றார். ஒரு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இந்த மாவட்டத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ன அமைச்சர் என்பது தெரியாத நிலை.
இதுதான் இன்று மாவட்டத்தின் நிலவரம். இன்று எந்த அரச அலுவலகங்களாக இருந்தாலும் எமது மக்கள் நலன் சார்ந்த வேலை திட்டங்கள் நடைபெற வேண்டும். மக்களுக்கான மதிப்பளிக்க வேண்டும்.
மக்களுக்காகத்தான் அதிபர், மக்களுக்காகத்தான் பிரதமர், அமைச்சர்ர்கள் மக்களுக்காகத்தான் அரசாங்க அதிபர் மக்களுக்காக, அரசியல்வாதிகள் மக்களுக்காகத்தான் அரச அதிகாரிகள் அதை யாரும் மறந்து விடக்கூடாது.
இந்த மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால், புண்ணியம் கிடைக்கும், மாவட்டத்தை விட்டு நீங்கள் வெளியேறலாம். எங்களது பழைய போராட்டங்களை நீங்கள் பார்க்கவில்லை தெரியாவிட்டால் ஊடக வாயிலாக தேடிப் பாருங்கள்.
கச்சேரியை இழுத்து மூடுவதற்காகவும் வீதியில் படுத்துக்கிடப்போம்
பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் நாம். மாசக்கணக்கில் வீதியில் படுத்துக் கிடந்து போராடியதை, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு வாய் இருந்தால் சொல்லும்.
அதேபோல் நாங்கள், கச்சேரியை இழுத்து மூடிவும் மாசக் கணக்கில் வீதியில் படுப்போம். மாவட்ட செயலகமும் பிரதேச செயலகமும் மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் நீங்களாக இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம்.
ஏனென்றால் மக்களுக்காகத்தான் நாங்கள். கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தில் பல இழப்புக்களை சந்தித்த மக்கள் பல வேதனைகளையும் சுமந்து கொண்டிருக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.
