ஒரு போதும் பதவி விலகமாட்டேன் -கெஹலிய திட்டவட்டம்
மருந்துப்பொருட்களை வாங்குவதற்கான நிதி கிடைக்கவில்லையெனில் தான் பதவி விலகுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, உரிய நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென தெரிவித்துள்ளார்.
"நான் நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை வெளியிட்ட அன்றே நாங்கள் திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம், அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கான நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது."
பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை
போதுமான நிதி கிடைத்துவிட்டதால் நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. நிதி கிடைக்காவிட்டால் பதவியில் நீடித்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று தான் நாடாளுமன்றத்தில் கூறினேன். அதை சில ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மருந்து தட்டுப்பாடு
மருந்து தட்டுப்பாடு குறித்து அவர் தெரிவிக்கையில், சுமார் 100 மருந்துகள் தற்போது கையிருப்பிலில்லை. எனினும், தேவையான நிதியை விடுவிப்பதன் மூலம் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
