தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் சட்டவிரோத ஆட்கடத்தல் - தடுக்க புதிய திட்டம்
இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தும் சட்டவிரோத நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு ஆட்கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்து, எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல்திட்டமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற செயலமர்வொன்றில் அவர் கூறியுள்ளார்.
தேசிய மூலோபாய செயல் திட்டம்
இதக்போது மேலும் கருத்துரைத்த அவர், “இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு நபர்களை ஆட்கடத்த மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முன்னெடுக்கப்படவுள்ள தேசிய மூலோபாய செயல் திட்டம் நான்கு முக்கிய புள்ளிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், தடுத்தல், பாதுகாத்தல், வழக்கு விசாரணை மற்றும் கூட்டு ஆகியவற்றின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழாமின் கீழ் உள்ள இருபது பங்குதாரர்களுடன் தற்போது இலங்கையில் ஆட்கடத்தலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கல்வி முறைமைக்குள் ஆட்கடத்தல் தொடர்பான விடயங்கள்
வெளிநாடுகளுக்கு இலங்கையர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் பிரதேச செயலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைக்குள் ஆட்கடத்தல் தொடர்பான விடயங்களை உள்ளடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.