விசேட விமானத்தில் நாடுகடத்தப்பட்ட 41 இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத பயணம்
அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகில் பயணித்த நிலையில், நாடு கடத்தப்பட்ட 41 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத குடியேற்ற முயற்சியுடன் நேரடியாக தொடர்புபட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து 41 பேருடன் பயணித்த படகை கிறிஸ்மஸ் தீவில் வைத்து அவுஸ்திரேலிய கடலோர காவல்படையினர் இடைமறித்திருந்தனர்.
16 வயதுக்கு குறைந்த ஆறு பேரும் 35 வயது வந்தவர்களும் குறித்த படகில் பயணித்துள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்பு, தொடுவாய் மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விசேட விமானத்தில் வந்திறங்கினர்
இந்த நிலையில் 100 இற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியப் படை வீரர்கள் அடங்கிய விசேட விமானத்தில் குறித்த 41 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த குழுவினர் நேற்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன், முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த குழுவில் இருந்த 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கானது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.