ஐஎம்எப் உடன்படிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இலங்கையுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தைக்காக, எதிர்வரும் 20 திகதி இரவு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூடவுள்ளது.
சர்வதேச நாணய நிதி
அன்றைய தினம், இரவே அவர்களால் இது குறித்து ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்படவுள்ளமை முக்கியமான அம்சமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் வலய பிரதானி, இலங்கை தூதுக்குழுவின் பிரதானி, ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதன்போது, அவர்கள் இலங்கைக்கு வழங்கும் விசேட ஒத்துழைப்பு தொடர்பில் உலகிற்கு கூறவுள்ளனர். இலங்கையின் ஊடகவியாளர்கள், இணையவழி முறைமையில் இதில் பங்கேற்க முடியும்.
320 மில்லியன் டொலர் நிதி
சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை அதன் இணையத்தளத்தில் பகிரங்கப்படுத்தியததை அடுத்து, நிதியமைச்சர் என்ற வகையில், அதிபர் அந்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளார்.
எனவே, தங்களுக்கு மாற்றுவழி இருக்குமாயின் நாடாளுமன்றில் அது குறித்து கருத்து வெளியிட எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் உள்ளது. 20 ஆம் திகதி இணக்கம் கிடைக்கப்பெற்றவுடன், அடுத்த இரண்டு வாரங்களுக்குள், நிச்சயிப்பட்ட கடன் தொகையில், முதல் தவணை நிதியாக சுமார் 300 அல்லது 320 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும்.
அதன் பின்னர், நான்கு ஆண்டுகளுக்குள், 8 தவணைகளில், இந்தக் கடன்தொகை கிடைக்க உள்ளது."என தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
