அரச நிறுவன மற்றும் நிதித்துறை சீர்திருத்தம் தொடர்பில் ஐ.எம்.எப் க்கு சிறிலங்கா வாக்குறுதி!
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பல நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச நாடுகள் மற்றும் அதன் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறித்த நிதித்துறை சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள சர்வதேச நாணய நிதியம், மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எப் நிறைவேற்றுப் பணிப்பாளருடன் சந்திப்பு
தெற்காசிய நாடுகளுக்கான, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் கடினமாக இருந்தாலும், நிதியுதவியை பெறுவதற்கு இதுவே மார்க்கம் என அவர் கூறியுள்ளார்.
நிதித்துறையில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும், அரச நிறுவனங்களை சீர்திருத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கு தெரிவிக்கப்பட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

