தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்: விளக்கம் கூறும் முன்னாள் சுகாதார அமைச்சர்
தமக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் இந்திய மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இந்நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் இருந்து 407 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதில் 04 வகையான மருந்துகள் மட்டுமே தரம் குறைந்தவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தடுப்பூசிகளை விநியோகித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்கள அதிகாரிகள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு, இந்த விவகாரம் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கைது செய்யப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |