பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தை இரத்து செய்து தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியும் போட்டியிடுகிறது.
அக்கட்சியின் தலைவரான இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றிருந்தது.
நீதிமன்ற தீர்ப்பு
அதில் கட்சியின் புதிய தலைவராக பாரிஸ்டர் கோஹர் கான் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறி, கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி லாகூர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. குறித்த வழக்கு நேற்று லாகூர் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
இதன் மூலம் இம்ரான்கான் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தை இரத்து செய்து தேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கட்சிக்கு பெரும் பின்னடைவு
இந்த விடயம் தொடர்பில், கட்சியின் புதிய தலைவர் கோஹர் கான் “எங்கள் தேர்தல் சின்னத்தை திரும்பப் பெற நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |