அநுர அரசாங்கத்திற்கும் மகிந்த தரப்பிற்கும் வலுக்கும் முறுகல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும், முன்னாள் ஜனாதிபதியின் தரப்பினருக்கும் இடையில் நிலவி வரும் கருத்து வேறுபாடு மேலும் வலுவடைந்து பெரும் மோதலுக்கு வழிவகுக்கும் சூழ்நிலை உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை மொட்டுக் கட்சி தரப்பில் தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
எனினும், நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பாதுகாப்பு போதுமானது என அரசாங்க தரப்பு தொடர்ந்தும் கூறி வருவதனால் இந்த சர்ச்சைக்குரிய நிலைமை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு மதிப்பீடு
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் குறைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு பிரதியமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளதோடு, அப்படி இல்லை என்று கூறினால் அதை மறுபரிசீலனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணியான மனோஜ் கமகே, முன்னாள் ஜனாதிபதி மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
ராணுவ பாதுகாப்பு நீக்கம்
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக் குறைப்பு தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவுக்கு அறுபது காவல்துறையினரே பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளதுடன், நிறுத்தப்பட்டிருந்த ராணுவத்தில் 227 பேர் சமீபத்தில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |