காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்ட காவல்துறையினர்: கைது செய்த மாணவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை
புதிய இணைப்பு
தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களுடைய விடுதலை தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மாணவர்களுடைய மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் விடுதலை செய்யப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதோடு 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
இந்த போராட்டத்தின் போது, கவிதரன், மிதுசன், எலிஸ்ராஜ், அபிசேக் மற்றும் நிவாசன் ஆகியோரே இவ்வாறு கைது செய்பட்டுள்ளனர்
அத்தோடு குறித்த பகுதியில் நிலவிய பதற்ற சூழலினால் A9 மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நீர்த்தாரை பிரயோகத்தை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கையின் சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கரிநாள் பேரணியை தடுக்கும் முகமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீர்த்தாரை பிரயோகம்
அதனை கட்டுப்படுத்த பெருமளவான காவல்துறையினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போராட்டத்தை அடக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.