இந்தியா நோக்கி வந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல்: செங்கடலில் பதற்றம்
ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி வந்த எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்ந்து வருகின்ற நிலையில் ஒரு பக்கம் காசாவில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதுடன் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றது.
அத்தோடு காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும், செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்தும் ஏமனில் உள்ள ஹவுதி படை தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
எண்ணெய்க் கப்பல்
இதற்கிடையே மீண்டும் செங்கடலில் உள்ள ஆண்ட்ரோமெடா ஸ்டார்(Andromeda Star) என்ற எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏமனின் ஹவுதி படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கப்பலில் சில மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஹவுதி படையும் இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ளது.
பனாமா கொடியுடன் வந்து கொண்டிருந்த இந்த கப்பல் பிரிட்டன் நாட்டிற்குச் சொந்தமானது என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மிகச் சமீபத்தில் குறித்த கப்பலை பிரிட்டன் விற்று இருந்ததுடன் அந்த கப்பலின் தற்போதைய உரிமையாளர் சீஷெல்ஸில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹவுதி படையினர்
இந்த எண்ணெய்க் கப்பல் இப்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ரஷ்யாவின் ப்ரிமோர்ஸ்கில்(Primorsk) இருந்து இந்தியாவின் குஜராத்(Gujarat) மாநிலத்தில் உள்ள வாடினாருக்கு சென்று கொண்டிருந்த நிலையிலேயே ஹவுதி படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் கப்பலுக்கும் மற்றும் உள்ளே இருந்த கப்பல் குழுவுக்கும் எந்தளவுக்குச் சேதம் ஏற்பட்டது தொடர்பான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லையென ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நவம்பர் முதல் செங்கடல், பாப் அல்-மண்டப் ஜலசந்தி(Bab al-Mandab Strait) மற்றும் ஏடன் வளைகுடாவில்(Gulf of Aden) செல்லும் வணிக கப்பல்களைக் குறிவைத்து ட்ரோன்(Drone) மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் ஈரான் ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹவுதி படையினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சர்வதேச வணிக போக்குவரத்து
இந்நிலை அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குச் சிக்கலைத் தருவதுடன் ஹவுதி இதுபோல தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் வணிக கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனடிப்படையில் இவை செலவை அதிகரிப்பதால் சர்வதேச வணிக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஹவுதி தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றமையினால் அப்பகுதியில் வணிக கப்பல்களைப் பாதுகாக்க பல்வேறு நாடுகள் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே அமெரிக்கா தனது விமானம் தாங்கி கப்பல் ஒன்றை இப்பகுதிக்கு அனுப்பியிருப்பதனால் அப்பகுதியில் பயணிக்கும் வணிக கப்பல்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யலாம்.
இருப்பினும் ஹமாஸ் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாக்குதல் தொடரும் என்பதை ஹவுதி படையினர் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |