யாழ்ப்பாணத்தில் சூதாட்ட நிலையத்தை அமைக்கப்போகும் இந்தியா,சீனா :அம்பலப்படுத்திய எம்.பி
யாழ்ப்பாணம்,கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சூதாட்ட நிலையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அந்த நிலையங்களை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலிய ரத்னதேரர் அம்பலப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலதாமாளிகையை வணங்கிவிட்டு, சூதாட முடியுமா
நாட்டில் தற்போது நான்கு சூதாட்ட நிலையங்கள் (கெசினோ) உள்ளன. அவற்றுடன் மேலதிகமாக நான்கு நிலையங்களை, அதுவும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடும் இடங்களிலேயே இவ்வாறான நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.
அந்த முறைமை உலகில் எங்குமில்லை. கண்டியில் தலதாமாளிகையை வணங்கிவிட்டு, சூதாட முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் சூதாட்ட நிலையங்களை அமைக்கப்போகும், இந்தியா, சீனா நபர்களின் பெயர்கள் என்ன? அவர்களின் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்றும் கேள்வியெழுப்பினார்.
நிதி இராஜாங்க அமைச்சரின் சமாளிப்பு
இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, இலங்கையர்கள் பங்குபற்ற முடியாத அளவுக்கு கெசினோவுக்கான சட்டங்களில் திருத்தங்கள் உள்ளன.
கெசினோவுக்குள் உள்நுழையும் போது, 200 அமெரிக்க டொலர்கள் கையிலிருக்க வேண்டும். அந்த கெசினோக்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே என்ற அடிப்படையில் கெசினோக்கள் ஆரம்பிக்கப்படும். தற்போது 10 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அனைவருக்கும் அனுமதி வழங்கப்படாது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |