டெஸ்ட் கிரிக்கெட் விரைவில் அழிந்து விடும் - குற்றம் சாட்டும் கிறிஸ் கெய்ல்
இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு கொடுப்பது போல் அதிக அளவில் ஊதியம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அதிக அளவிலான ஊதியம்
அப்போது அவர் பேசியதாவது, இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் சிறிது மாறிவிட்டது. கிரிக்கெ தற்போது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது.
ரி-20 போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிக அளவிலான பணம் செலவிடப்படுகிறது.
சிறிய அணிகளைக் காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைகளைகளைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைவரும் பயனடைவர். சிறிய அணிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள அதிக அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது.
பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு உள்ள சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் சிறிய அணிகளுக்கும் கிடை க்க வேண்டும்.பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்று மற்ற அணி வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் சில பெரிய அணிகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதில் அர்த்தமே இல்லை. அது விளையாட்டை அழித்து விடும் என்றார்.
