சர்வதேச நாணய நிதியம் மறுப்பு; இந்தியாவின் உதவியை நாடும் இலங்கை அரசு!
நாட்டின் பொருளாதார மீட்சிக்கு இலங்கை இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இவ்வருட இறுதிக்குள் கடனை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் மறுத்துள்ள நிலையிலேயே சிறிலங்கா அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மற்றும் இந்தியாவின் நிதி அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு
சிறிலங்கா அரசினால் கோரப்பட்ட 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியை இவ்வருட இறுதிக்குள் வழங்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியதின் அறிவிப்பு தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் தேவை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இதனால் இலங்கை கோரிய கடன் தொகையை இவ்வருட இறுதிக்குள் வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் குறித்த அறிவிப்பால் சிறிலங்கா அரசு இந்தியாவிடம் இருந்து கடன் உதவிகளை பெறுவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இருவரும் புதுடில்லியில் திடீரென சந்தித்ததற்கு இதுவே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார மீட்சி சம்பந்தமாக உயர் ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் சீதாராமனுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளை இதுவரை நடத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தையின் நோக்கம்
இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம், இலங்கை மற்றும் இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதி உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பானது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய நிலைப்பாடு இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் சீதாராமனிடம் தெரிவித்துள்ளார்.
