ராஜீவ் காந்தி படுகொலை விவகாரம் - விடுதலையான சாந்தன் மற்றும் முருகன் வெளியிட்டுள்ள கருத்து!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த தாம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தாம் இலங்கைக்கு செல்ல தமிழக அரசு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என சாந்தன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேர் நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலைக்காக போராட்டம்
இந்த நிலையில் வேலூர் சிறைச்சாலையிலுள்ள முருகன் மற்றும் சாந்தனை சட்டத்தரணி ராஜகுரு நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தமது விடுதலைக்காக போராடிய சட்டத்தரணிகள், தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்ராலின், மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிற்கு அவர்கள் நன்றியை தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முருகன் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மனைவி நளினியுடன் இணைந்து வாழவுள்ளதாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து தமிழகத்தில் தங்கியிருப்பதா? அல்லது லண்டன் செல்வதா என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் முருகன் தெரிவித்ததாக சட்டத்தரணி ராஜகுரு தெரிவித்துள்ளார்.
ஆலய வழிபாடு
இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபடவுள்ளதாகவும் சாந்தன் தெரிவித்தார்.
மேலும் தனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல உள்ளதாகவும் கடவுச் சீட்டு காலாவதியாகியுள்ளமையினால் அதனை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் 6 பேரில் ஒருவரான ரவிச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது தாயார் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.
நளினி சிறையில்
இதேவேளை, நளினியின் விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்காமையினால் இன்று சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு இல்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.