இந்தியா இலங்கையில் மேற்கொண்ட இரகசிய இராணுவ நடவடிக்கைகள்
இலங்கையைப் பொறுத்த வரையில் இந்திய இராணுவத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பலவிதமான இரகசிய இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார்கள்.
மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்தகைய நடவடிக்கைகளில் சில நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தன. சில வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தியாவின் இரகசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இலங்கையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட சில முக்கிய இராணுவ நடவடிக்கைகள் பற்றி இன்றைய அத்தியாயத்தில் ஓரளவு மேலோட்டமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்தில் இந்தியா நேரடியாகவும், மறைமுகமாகவும், இரகசியமாகவும் பல தலையீடுகளைச் செய்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கடந்தகால அனுகுமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய அறிவும் தெளிவும் தமிழ் இனத்தின் மத்தியில் இருப்பது அவசியம் என்பது – காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.
இராணுவ நடவடிக்கைகள்
இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் இராணுவத் தலையீடுகள் முதன்முதலில் 1971ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தன – என்று கூறலாம்.
ஜே.வீ.பி.யை அடக்குவதற்கு என்று, சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில், இந்தியப்படைகள் இலங்கைக்கு வந்திருந்தன. அதன் பின்னர் 1987ம் ஆண்டில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு என்று கூறி, இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்தன.
இந்த இரண்டு நடவடிக்கைளும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேபோன்று விடுதலைப்புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்ற மேற்கொண்டிருந்த ஓயாத அலைகள்-4 நடவடிக்கைகளின் போது, யாழ் குடாவில் முற்றுகைக்கு உள்ளாகி இருந்த சிறிலங்கா படையினரைக் காப்பாற்ற இந்தியப் படையினர் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி இருந்தார்கள்.
பலாலி தளத்தைக் கைப்பற்றி ஒரு நாள் முழுவதும் அதனைத் தக்கவைத்தபடி சிறிலங்காப் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியப் படையினர் திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் இறுதி நேரத்தில் பலவேறு காரணங்களினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டன. அந்த நடவடிக்கையும் சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அதேவேளை, சிறிலங்கா அரசின் அனுமதி இல்லாமல் இலங்கையில் படைநடவடிக்கைள் எடுப்பதற்கான திட்டங்கள் சிலவற்றையும் இந்தியப் படையினர் முன்னர் வகுத்திருந்தார்கள். அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுமிருந்தார்கள்.
1987ம் ஆண்டின் நடுப்பகுதியில் சிறிலங்காப் படைகள் யாழ்ப்பாணம் வடமாராட்சியில் ஷஒப்பரேசன் லிபரேசன்| நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது, யாழ் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் ‘ஒப்பரேசன் பூமாலை| நடவடிக்கை 04.06.1987 அன்று இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதி இன்றி இலங்கையில் இந்தியா மேற்கொண்ட ஒரு அதிரடி இராணுவ நடவடிக்கை இது.
இரகசியத் திட்டங்கள்
இது போன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக இலங்கை மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்தியா பல இரகசியத் திட்டங்களை வகுத்திருந்த விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராளிகளை அடக்குவதற்கு என்று ஜே.ஆர். அரசாங்கம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவதற்கும், இலங்கை மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கும் – இந்தியா பல திட்டங்களை வகுத்திருந்தது.
இனப்பிரச்சினையைக் காரணம் காண்பித்து இந்தியாவின் அப்போதைய ஜென்ம விரோதிகளான அமெரிக்கா, பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்தெல்லாம் சிறிலங்கா அரசாங்கம், ஆயுதம் மற்றும் பல்வேறு உதவிகளையெல்லாம் பெற ஆரம்பித்திருந்ததைத் தொடர்ந்து, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்திய அரசியல் தலைமையிடம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. அதற்கான ஒரு இராணுவத் திட்டமும் தீட்டப்பட்டது.
அதேவேளை, இந்திய இராணுவத்தின் தளபதி பொறுப்பை கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீ புதிதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் நவீனமயப்படுத்தப்பட்டன.
புதிய போர் யுக்திகள் வகுக்கப்பட்டன. நவீன ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தான் புதிதாகப் பெற்றிருந்த தனது பலத்தைப் பரீட்சித்துப்பார்க்க ஒரு இடத்தைத் தேடிவந்தது.
அதேவேளை இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் உருவாகி இருந்ததால், இலங்கைத் தீவை தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு நிலையமாகத் தெரிவுசெய்து கொண்டது.
இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியப் படைத்தளபதி சுந்தர்ஜீயிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த படையெடுப்பிற்கு யார்யார் தலைமை தாங்குவது, எந்தெந்த இலக்குகளைத் தாக்குவது, எந்தெந்தப் படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவது என்றெல்லாம் திர்மாணிக்கப்பட்டிருந்தது.
இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் நடவடிக்கைக்கு திரிஷக்தி என்று பெயரும் சூட்டப்பட்டிருந்தது. ஏதோ காரணத்திற்காக இந்த நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.
சிறிலங்காவிற்கான பணி
இதேபோன்று இலங்கைக்கு எதிரான மேற்கொள்வதற்கென்று மற்றொரு இரகசிய நடவடிக்கையும் திட்டமிட்டப்பட்டிருந்தது.
ராஜீவ் காந்தியின் பணிப்புரையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்காக இந்திய இராணுவத்தின் பல்வேறு படை அணிகளைக் கொண்ட தனிப் பிரிவொன்றும் 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
MO-SL’ என்று இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டிருந்தது. ‘MO-SL’ என்றால் (Mission Of –Sri Lanka) என்று அர்த்தம். 87ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட ‘ஒப்பரேசன் பூமாலை|(Operation Poomalai) நடவடிக்கைக்கு சிறிலங்காப் படையினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்தியப் படையின்; இந்த விஷேட பிரிவினர் களமிறக்கப்பட்டிருப்பார்கள்.
ஆனால் ஒப்பரேஷன் பூமாலை நடவடிக்கையின்போது சிறிலங்காப் படையினர் எதுவுமே செய்யமுடியாது அடங்கிப்போயிருந்ததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது. இதேபோன்று, இலங்கையில் மேற்கொள்ளுவதற்கென்று இந்தியா மற்றொரு இரகசிய இராணுவ நடவடிக்கையையும் திட்டமிட்டிருந்தது.
ஒப்பிரேஷன் கொழும்பு
இந்தியப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு சற்று முந்திய காலப்பகுதியில், கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்; இரகசிய இராணுவ நடவடிக்கை ஒன்றை இந்திpய இராணுவம் திட்டமிட்டிருந்தது. யாழ்பாணத்தில் ‘ஆப்பரேசன் பூமாலை|(Operation Poomalai) இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதற்கு சற்று முன்னர் இந்த இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது.
வெளியே எவருக்கும் தெரியாது இந்தியா மேற்கொண்டிருந்த இந்த இரகசிய நடவடிக்கை பற்றி, ராஜேஷ் காடியன் என்கின்ற இந்திய இராணுவ ஆய்வாளர் பின்னாட்களிலேயே தகவல் வெளியிட்டிருந்தார்.
INDIA’S SRI LANKA FIASCO என்ற தனது ஆய்வு நூலில் இந்தியாவின் இந்த இரகசிய இராணுவ நடவடிக்கை பற்றி அவர் தகவல் வெளியிட்டிருந்தார்.
1987 இல், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மீது, அல்லது கொழும்பிலுள்ள முக்கிய இலக்கொன்றின் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருந்தது. அதற்காக இந்திய இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற பராக் கொமாண்டோக்கள் 100 பேர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள்.
இந்தப் பராக் கொமாண்டோக்கள் பொதுமக்கள் போலவும், வியாபாரிகள் போலம் மாறுவேடமிட்டே கொழும்புக்கு வந்திருந்தார்கள். கொழும்பின் புறநகர் பகுதியில் இருந்த இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா ஒன்றிலும், மற்றொரு இந்தியருக்குச் சொந்தமான ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலும் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்கள் மேற்கொள்ள இருந்த தாக்குதலுக்கு உதவுவதற்காகவும், மேலதிக துருப்பக்களை ஏற்றி இறக்குவதற்கு ஏதுவாகவும், நான்கு எம்.ஐ.-8 ரக உலங்குவானூர்திகள் இந்தியாவின் தென்கரைப் பகுதி ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இறுதி நேரத்தில் அந்த இரகசிய நடவடிக்கை கைவிடப்பட்டது.
பின்னர் அந்தப் பராக்கொமாண்டோக்களில் சிலர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனுப்பட்டார்கள் மற்றவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள்.
மலையகத்தில்
இதேபோன்று,1987-88ம் ஆண்டுகளில் இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தபோதும், இலங்கையில் மேற்கொள்வதற்கு என்று இந்திய இராணுவத்தினர் மற்றொரு இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்கள்.
இந்தியாவிற்கு எதிராக ஜே.வீ.பியினர் தென்பகுதியில் பிரச்சாரங்களைக் கட்விழ்த்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறையில் இறங்கியிருந்த காலப்பகுதியில் இந்தியப் படையினர் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டடிருந்தனர்.
இந்தியப் பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது என்று உத்தரவிட்டு இந்திய விரோதப் போக்கை ஜே.வீ.பியினர் மிக மேசமாக தென்பகுதிகளில் மேற்கொண்டு வந்த வேளையில், மலைநாட்டில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தாக்குதல்கள் இடம்பெற்றுவிடும் என்று இலங்கையில் இருந்த இந்தியப் படையினர் எதிர்பார்த்தார்கள்.
அப்படி மலையகத்தில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் மலையகத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, இந்தியப் படையின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங்கின் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
இதற்காக பலாலி தளத்தில் இந்திய இராணுவத்தின்ஒரு விஷேட பரசூட் கொமாண்டோ அணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஹெலிக்கொப்பர்ஸ் மூலமாக இவர்களை மலைநாட்டில் தரையிறக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
அதேவேளை மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 76வது காலட் படைப்பிரிவை மட்-பதுளை ஏ-5 வீதி வழியாக மலைநாட்டிற்கு நகர்த்தும் திட்டத்தையும் இந்தியப்படையினர் கைவசம் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.
ஆனால் மலையகத்தில் இந்தியத் தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்படாததால் இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
மாத்தையாவிற்கு துணையாக..
இதேபோன்று புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, புலிகளின் தலைமைக்கு எதிராக சதி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதும், இந்தியா தனது படைகளை வன்னிக்கு அனுப்பி மாத்தையாவிற்குத் துணையாகக் களம் இறக்கும் திட்டத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஆனால் அந்தச் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுவிட்டதால், அது கை கூடாமல் போயிருந்தது. இதேபோன்று புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்தும், இந்தியாவில் இருந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பை கருணாவுடன் இணைத்து ஒரு இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது.
(அந்த நடவடிக்கை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்) கேள்விகள் இந்த இடத்தில் எமது வாசகர்களாலும், பொதுவாக பல தமிழ் மக்களாலும், குறிப்பாக இளையதலைமுறையினராலும் எழுப்பப்படுகின்ற சில கேள்விகள் பற்றிப் பார்க்கவேண்டி இருக்கின்றது. இந்தியா எதற்காக ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்தது?
தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டது? தமிழ் மக்களில் அக்கறைகொண்டு இலங்கைப் பிரச்சனையில் தலையிட்ட இந்தியா மீது விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்குதல் நடாத்தினார்கள்? புலிகள் செய்தது சரியா? புலிகள்-இந்திய யுத்தம் எவ்வாறு ஆரம்பமானது? ஏன் ஆரம்பமானது? எமது வாசகர்கள் மத்தியில் இருந்து எழுகின்ற இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்தவாரம் முதல் தேடுவதற்கு முனைவோம்.
தொடரும்….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |