இந்திய கடற்தொழிலாளர்களால் அல்லலுறும் மன்னார் கடற்தொழிலாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை காரணமாக கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்களில் இருந்து தீர்வு வேண்டும் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் (14) மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே இந்த விடயம் பேசப்பட்டது.
மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் தொடர்சியாக எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வை பெற்று கொடுக்கும் விதமாகவே இந்த விசேட கூட்டம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி
இதில் மன்னார் மாவட்டத்தில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பாகவும், மன்னார் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலை செயற்திட்டதிற்கு கடற்தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் எதிர்ப்பு தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக மாவட்ட ரீதியாக இடம் பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கடற்தொழிலாளர்களால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் கடல் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகளால் கிராம மட்டகடற்தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளான டைனமோட், சுருக்குவலை ,பத்தை வைத்தல்,உள்ளூர் இழுவைபடகு மீன் பிடி, இரவு நேர சுருக்குவலை,டைவிங் என பல்வேறு பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக கடற்படை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகடற்படைக்கு அமைச்சர் உத்தரவு பிறப்புத்ததுள்ளார்.
மீனவ சங்கங்கள்
மேலும், மீனவ சங்கங்கள் மற்றும் சமாசங்களும் கடற்படையுடன் இணைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இந்திய கடற்தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் இந்திய இழுவைப் படகுகளை உள்ளூர் கடற்தொழிலாளர்கள் இணைந்து தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் அனர்த்தங்களின் போதும் சூறாவளி,மற்றும் புயலின் போதும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் போது நிவாரணம் வழங்குவதில் உள்ள தாமதம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் இந்திய இழுவைப் படகு தொடர்பில் இந்திய அரசியல் தலைவர்களுடனான விரைவில் கலந்துரையாடலை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |