கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை புறக்கணிக்கும் சாகல: இந்திய விஜயம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் பணிக்குழுவின் பிரதிநிதி சாகல ரத்னாயக்க கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைப் பற்றி எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்ரமணியம் கவலை வெளியிட்டுள்ளார்.
அவரது இல்லத்தில் இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் காரைக்கால் பட்டினத்திலே இருக்கின்ற கடற்றொழிலாளர்கள், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமது கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியா கடற்றொழிலாளர்கள்
விடுதலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஒரு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டும்.
நீங்கள் இங்கே வந்து செய்கின்ற தொழிலானது தடை செய்யப்பட்ட ஒரு தொழில்முறையென அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி அடாவடித்தனமாக வந்து எமது வளங்களையும் அழித்து, வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று எமது வயிற்றில் அடிக்கின்றீர்கள், நமது தொழில் முதல்களை அழித்து செல்கின்றீர்கள்.
இந்த தொழிலானது ஒரு கெடுதலான தொழில் என நீங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தெரிவித்திருக்கின்றீர்கள், நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்.
இழுவை மடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்வதாக ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள்.இலங்கையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவே உங்களது படகுகள் கைது செய்யப்படுகின்றன.
இழுவைமடி படகுகள்
இந்த சட்டமானது 1979 ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் கொண்டுவரப்பட்டது. 1974 - 1976களிலே இரண்டு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின்போது முதன்முதலாக இலங்கை இந்திய கடல் எல்லைக்கோடு அடையாளப்படுத்தப்பட்டது.
இதற்கு அனுசரணையாகவே 1979 ஆம் ஆண்டு வெளிநாட்டு மீன்பிடி படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
உங்களுடன் போராடி, பேச்சுவார்த்தைகள் நடாத்தி எங்களுக்கு எந்த விதமான தீர்வும் எட்டாத நிலையில் தான் அதாவது ஏறக்குறைய 35 வருடங்களுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு நாங்கள் நீதிமன்றத்தை நாடியதால் தான் இன்று இந்த இழுவைமடி படகுகள் கைது செய்யப்படுகின்றன.
முதல் தடவை கைது செய்யப்படுகின்ற கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இரண்டாவது தடவை எல்லை தாண்டிவரும் கடற்றொழிலாளர்களே சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.இது திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. தொடர்ச்சியாக பயமின்றி அவர்கள் வருவதாலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகின்றார்கள்.
கடற்றொழிலாளர் பிரச்சினை
இந்தப் படகுகளை கைது செய்யுமாறு நாங்கள் கடற்படைக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். அவர்கள் இவ்வாறு கைதுகளை செய்யும்போது அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர் பணிக்குழாமின் பிரதிநிதியான சாகல ரத்னாயக இந்தியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றார். அங்கே அவர் எமது கடற்றொழிலாளர் பிரச்சினை பற்றி பேசவில்லை. அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சாதகமான விடயங்களை மாத்திரமே பேசுகின்றார் தவிர கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை பற்றி தொட்டுக் கூட பார்க்கவில்லை.
இவ்வாறு நாங்கள் எமது அரசாங்கத்தாலும் இந்தியாவாலும் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கின்றபடியால் தான் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். உங்கள் மீது இருக்கின்ற வெறுப்பிலேயோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலேயோ நாங்கள் இதனை செய்யவில்லை.
எனவே இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த தடை செய்யப்பட்ட இழுவைமடி தொழிலினை உடனடியாக கைவிட வேண்டும் என எமது அமைப்பின் சார்பில் நான் கோரிக்கையை முன்வைக்கின்றேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |