முருகனை லண்டனுக்கு அனுப்ப இந்திய அரசு மறுப்பு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்து, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சோ்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோா் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கின்றனா்.
லண்டனில் வசிக்கும் மகளுடன் சோ்ந்து வாழ
இந்த நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சோ்ந்து வாழ விரும்புவதால், கவுச்சீட்டு கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று வருவதற்கு பாதுகாப்பு வழங்க, சென்னை காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முருகன் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் முன்னிலையாகி, கொலை வழக்கில் குற்றவாளியான இலங்கையைச் சோ்ந்த முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே அந்த நாட்டுக்கும் திருப்பி அனுப்ப முடியும் என்றும் தெரிவித்தாா்.
இலங்கை தூதரகத்துக்கு அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு
தமிழக அரசு தரப்பில், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முருகனை அழைத்துவர காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், முருகனுக்குப் பயண ஆவணம் வழங்குவதற்கான நோ்காணலுக்கு இலங்கை தூதரகம் அழைக்கும்போது, முருகனுக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |