அரபிக்கடலில் கடத்தப்பட்ட மால்டா சரக்கு கப்பல்: காப்பாற்ற களத்தில் இறங்கிய இந்திய கடற்படை
அரபிக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது.
அதேவேளை, அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
கடந்த வியாழக் கிழமையன்று அரபிக் கடல் பகுதியில் 18 பேருடன் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டு சரக்கு கப்பலை (எம்.வி.ரூன் ) 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது.
நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்திய கடற்படை கப்பல்
எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படை கப்பல் தற்போது எம்.வி.ரூன் கப்பலை நேற்று காலை இடைமறித்தது.
இதனை தொடர்ந்து எம்.வி.ரூன் சரக்கு கப்பலுக்குள் நுழைந்த கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியை, இந்திய கடற்படையினர், கூட்டணி நாடுகளின் கடற்படை உதவியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |