யாழ் மண்ணைப் புகழ்ந்த இந்திய காவல்துறை அதிகாரி
யாழ்ப்பாணத்தில் சுகாதாரம் மிகவும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் சுகாதார சீர்கேடான எந்த விடயங்களையும் பார்க்க முடியவில்லை எனவும் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் இயக்குநரான முனைவர் சி.சைலேந்திரபாபு (C. Sylendra Babu) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''நான் பிறந்து வளர்ந்த கன்னியாக்குமாரிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய உறவு உண்டு. யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஊர்களின் பெயர்கள் மற்றும் உணவுகள் கன்னியாக்குமாரியிலும் உண்டு.
அந்தக் காலத்தில் கன்னியாக்குமாரியைச் சேர்ந்த பலர் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியிருந்தார்கள். ஏதோ ஒருவகையில் யாழ்ப்பாணத்துப் பேச்சும் எங்களுடைய பேச்சும் ஒரே மாதிரி இருக்கின்றது. இலங்கையிலே இரண்டாவது பெரிய வணிக நகரமான யாழ்ப்பாண மக்கள் பெரிய வீடுகளிலே வாழ்ந்து வருகின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் சுகாதாரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுகாதார சீர்கேடான எந்த விடயங்களையும் பார்க்க முடியவில்லை. வீதிகளில் ஒழுங்காக வாகனங்களை செலுத்துகின்றார்கள். அனைவரும் தலைக்கவசம் அணிந்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் இயற்கை மிகவும் அழகாக இருக்கின்றது. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்குவதற்கு சிறந்த இடம். தமிழ்நாட்டில் இருக்கின்ற சமூக கட்டமைப்பு தான் இங்கேயும் இருக்கின்றது.
அந்தக்காலத்தில் மொத்த தமிழ்நாட்டு மக்களும் இலங்கை வானொலியை தான் கேட்பார்கள். ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்கள் இலங்கை வானொலிகளுக்கு தான் அடிமை.
தமிழ் நாட்டு காவல்துறையின் உயர் அதிகாரியான நான் இதுவரை பத்து இலட்சம் மாணவர்களிடம் நேரடியாக பேசியிருக்கின்றேன். முதல்முறையாக பல்கலைக்கழக மாணவர்களிடம் நேரடியாக பேசியது யாழ்ப்பாணத்தில் தான்.
தொலைபேசி பாவனை, மது பாவனை , போதைப்பொருள் பாவனை என்பவற்றிலிருந்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இன்று பெண்கள் தான் கல்வியில் தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
உலகளவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மிகக் குறைந்த விலையிலான போதைப்பொருட்களையே இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பயன்படுத்துகின்றனர்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது. அதாவது போதைப்பொருளுக்கான கேள்வியும் விநியோகமுமே அவையாகும். போதைப்பொருள் விநியோகத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் போதைப்பொருளுக்கான கேள்வியை குறைப்பதென்பது மக்களிலேயே தங்கியுள்ளது.'' என தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |