இலங்கை மீதான கண் - சீனாவின் கனவைத் தகர்த்த இந்தியா..!
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்ட நகர்வு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த அனுராதா யகம்பத் நீக்கப்பட்ட நகர்வு ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தோ - சீனப் போட்டி இருந்தமை தற்போது துல்லியமாக பகிரங்கமாகியுள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியப் பெரியண்ணர் வெற்றி பெற்றமைக்கான ஆதாரமாக செந்தில் தொண்டமானின் ஆளுநர் நியமனம் வந்திருக்கிறது.
சீனா தனது யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து அங்கு தனக்குரிய சில நகர்வுகளை அபிவிருத்தி என்ற பேரில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த விடயம் யாவரும் அறிந்ததே.
ஆளுநர் மாற்றம்
சீனாவின் இந்த நகர்வுக்கு கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த அனுராதா யகம்பத் பலமான ஆதரவையும் அதற்குரிய நகர்வுகளையும் செய்த போது தான், இந்தியாவின் அஸ்திரம் பாய்ந்திருக்கிறது.
இந்த அஸ்திரம் இறுதியில் அனுராதா யகம்பத்தின் ஆளுநர் பதவியை கடாசி தற்போது, செந்தில் தொண்டமானை ஆளுநராக பதவியில் அமர்த்தியுள்ளது.
ஈழத் தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் கிழக்கு மாகாணத்தை சீனாவின் யுனான் மாகாணத்துடன் இணைக்கும் இந்த தந்திரோபாயத்தின் அடிப்படையிலும், அதன் ஒரு அங்கமாகவும் யுனானின் ஆளுநர் வாங் யூ வோ கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தார்.
அவ்வாறாகச் சென்றவர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துடன் முக்கியமான சந்திப்புகளுக்கு நேரம் குறித்த நிலையில் தான், அவர் ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
சகோதர இணைப்பு
யுனான் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண சகோதர இணைப்புக் குறித்த எதிர்ப்பு டெல்லி ஊடாக கொழும்புக்கு வந்த பின்னர், இந்த சகோதர மாகாண இணைப்பு என்ற அடிப்படையில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களையும் கிழக்கில் முன்னெடுக்க வேண்டாம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் ஆளுநர் அனுராத யகம்பத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறான அறிவுறுத்தல் வந்து சில நாட்களுக்கு பின்னர் குறிப்பாக, யுனான் ஆளுநரின் இலங்கை பயணத்துடன் அனுராதா யகம்பத் பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.
இதனால் கடந்த வாரம் அவருக்கும் சீன ஆளுநருக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பு மீளெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் திட்டமிட்டபடி தனது குழு மற்றும் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் சகிதம் திருகோணமலைக்குச் சென்ற யுனான் ஆளுநர் திருகோணமலை துறைமுகத்தையும், சீனன்குடா பகுதியையும் பார்வையிட்டிருக்கிறார்.
ஆனால் இந்த நிகழ்வுகளில் புதிய ஆளுநரான செந்தில் தொண்டமான் பிரசன்னப்படவில்லை.
சீனன் குடா
சீனாவை பொறுத்தவரை தனக்கும் சீனன் குடாவுக்கும் இருக்கும் வரலாற்றுத் தொடர்பின் அடிப்படையில் சில திட்டங்களை திருகோணமலையில் செய்ய ஆவல்படுகின்றது.
இந்த வியூகத்திற்கு ஏற்ற வகையில் யுனான் மாகாணத்தை கிழக்கு மாகாணத்துடன் ஒரு சகோதர மாகாணமாக இணைக்கும் தந்திரத்தை அது நகர்த்த திட்டமிட்டு இருந்தது.
சீன வரலாற்றில் இன்றுவரை மகா அட்மிரல் என வர்ணிக்கப்படும் பெரும்கடற்படைத் தளபதியாக ஜென்கே இருக்கின்றார். இந்த ஜென்கே 15ஆம் நூற்றாண்டில் யுனான் மாகாணத்தில் பிறந்தவர்.
அவரது கடற்படை பெரும் கடற்படையாக வியாபித்திருந்த காலத்தில் சீனக் கடற்கலங்கள் அடிக்கடி திருமுலையிலும் நங்கூரமிட்டிருந்தன. இதனால், தான் இன்றுவரை சீனன்குடா என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
சீனக் கடற்படைத்தளபதி ஜென்கேயின் தலைமைத்துவத்தில் சீனா 14ஆம் நூற்றாண்டில் 3500 கடற்கலங்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையை வைத்திருந்தது. அவற்றில் சில ஐரோப்பாவால் கட்டப்பட்ட கப்பல்களை விட 5 மடங்கு பெரியதாக இருந்ததாக மேற்குலக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீனக் கடற்படை கடற்படை வலு
ஐரோப்பியர்கள் உலகைச் சுற்றி பல நாடுகளை கண்டு பிடிப்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னரே சீனா உலகை சுற்றி வருவதற்கு தயாராக இருந்ததது.
ஆயினும் சீனக் கடல் வணிகர்கள் உலகைச் சுற்றி பெரும் செல்வத்தை திரட்டிக்கொண்டு வந்தால், உள்ளூரில் தமது அதிகார மையத்திற்கு வேட்டு வைத்து விடுவார்கள் என மின் வம்சம் அஞ்சியதால், அவர்களின் அரசு இந்த கடற்படை வலுவை அழித்ததாக கூறப்படுகிறது.
சீனாவிடம் இருந்த பாரிய கப்பல்களை மின் வம்ச ஆட்சியாளர்கள் அழித்ததால் சீனர்களின் கடல்வலு பின்னர் இழக்கப்பட்டுள்ளது.
ஆனால், பின்னர் மீண்டும் உலக அரங்கில் சீனா தனது பழைய கடல்வலுவை எடுக்கத் தலைப்படுவதால், ஒரு காலத்தில் அட்மிரல் ஜென்கே கடற்கலங்களை தரிக்க வைத்த இலங்கையின் சீனன் குடா மீதும் அதற்கு கண் வர இதனை இந்தியாவும் கண்ணுற்று பார்க்க, கிழக்கு ஆளுநர் அனுராதா யகம்பத் நீக்கப்பட்டு - இந்தியா தனது இரண்டாவது தாயகம் அல்லது வீடு என அடிக்கடி கூறும், செந்தில் தொண்டமான் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆகமொத்தம் செந்தில் தொண்டமானின் இந்த ஆளுநர் தெரிவு இந்தியப் பெரியண்ணரின் ஊடாக ரணிலால் மேற்கொள்ளப்பட்ட நகர்வாகவே கூறப்படுகிறது.
