பிற நாட்டவரின் குடியேற்றத்தை எதிர்த்து பிரித்தானியாவில் மாபெரும் பேரணி
புலம்பெயர் குடியேற்றத்திற்கு எதிராக 110,000 க்கும் மேற்பட்ட மக்கள் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் முன்னெடுத்த போராட்டமானது பேசுபொருளாகியுள்ளது.
இது அந்நாட்டின் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சில எதிர்ப்பாளர்கள் அந்நாட்டு காவல்துறையினருடன் மோதியதில் குறைந்தது 26 அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
வலதுசாரி போராட்டக்காரர்கள்
சனிக்கிழமை நடைபெற்ற "Unite the Kingdom" என்ற குறித்த பேரணியானது வன்முறையையும் தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய லண்டனில் உள்ள வெள்ளை மண்டபத்தில் கூடியிருந்த சுமார் 5,000 ஆர்ப்பாட்டகாரர்களை கொண்ட குழுவிலிருந்து வலதுசாரி போராட்டக்காரர்களை காவல்துறையினர் விலக்கி வைக்க முயன்றபோது வன்முறை வெடித்ததாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
அந்நாட்டின் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த இந்த பேரணியில், எதிர்பார்ப்புகளை விட 110,000 முதல் 150,000 பேர் வரை கலந்து கொண்டதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை
போராட்டக்காரர்களில் சிலரிடமிருந்து தங்கள் அதிகாரிகள் "ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை" எதிர்கொண்டதாகவும், அவர்களில் நான்கு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வன்முறை தொடர்பாக குறைந்தது 25 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
