இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் விவகாரம் - சமரச போக்கில் தீர்வுகாண யோசனை
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை பூகோள - அரசியல் பிரச்சினையாக மாற்றி, அதை பாரிய மோதலாக உருவாக்க விருப்பம் இல்லை என இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் வட பகுதி கடற்றொழிலாளர்களுக்கும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் பதற்ற நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உணர்வுபூர்வமான விடயம் எனவும், மோதல்கள் மூலம் அதற்கு தீர்வு காண முடியாது எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இரண்டு நாடுகளின் கடற்றொழிலாளர்களினதும் கரிசனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் புரிந்துணர்வு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தந்த நாடுகளின் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவது இரு நாட்டு பிரஜைகளின் உரிமை என அமைச்சர் அழகப்பெரும வலியுறுத்தினார்.
வடக்கில் உள்ள பலரது வாழ்வாதாரமாகவும், வருமான ஆதாரமாகவும் உள்ள நாட்டின் கடற்றொழில் வளத்தை பாதுகாக்க அரசாங்கம், கடற்றொழில் அமைச்சு, அரச அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
