இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள்: ஹமாஸ்சின் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் கண்டனம்
இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இயக்கம் திடீர் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள கேரளாவை சேர்ந்தவர்கள் உட்பட பல இந்தியர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இஸ்ரேலின் தென் பிராந்தியத்தில் கேரளாவை சேர்ந்த பலர் தாதியர்களாகவும் பிரத்தியேக முதியோர் பராமரிப்பாளர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.
பாதுகாப்பு வழிமுறைகள்
இந்த நிலையில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பதுங்குழிகளுக்குள் தாம் உள்ளிட்ட இந்தியர்கள் தஞ்சமடைந்துள்ளதாக இஸ்ரேலில் எட்டு ஆண்டுகளாக தாதியாக பணிபுரியும் ஷைனிபாபு என்ற பெண் கூறியுள்ளார்.
கடந்த காலங்களைப் போலல்லாது மிகவும் கடினமான ஒன்றாக தற்போதைய சூழல் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய மத்திய அரசு பாதுகாப்பு வழிமுறைகளை அறிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகள் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தூதரக அதிகாரி இதர தகவல்களை வழங்க எப்போதும் தயார் நிலையில் இருப்பார் எனவும் இந்திய மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா
கவனமாக இருப்பதுடன், தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து, பாதுகாப்பு உறைவிடங்களுக்கு அருகாமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுத இயக்கத்தினர் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக இந்தியப் பிரதமர் நநேர்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சி அளிக்கிறது எனவும் இந்த போரில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்கிறோம் எனவும் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் தாம் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கிறோம் எனவும் இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.