கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன்: நாடாளுமன்றில் நடந்த வாக்குவாதம்
பெண்களை கேவலப்படுத்தினால் கன்னத்தில் அறைவேன் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தன்னை பெட்டை நாயென ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்ததாக குறிப்பிட்டு சபையில் வியாழக்கிழமை (05) சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது டயனா கமகே தொடர்ந்து கூறுகையில், "என்னை மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் வைத்து பெண் நாய் என கூறினார். உண்மையில் இது வார்த்தை ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகமாகும்.
இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும் செயலாகும்.
கன்னத்தில் அறைவாங்க நேரிடும்
நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் எங்கேயும் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை.
பெண்களை யார் என்று நினைத்தீர்கள். பெண்களை பெட்டை நாய் என்று இந்த சபைக்குள் கூற முடியாது.
பெண்களிடம் கன்னத்தில் அறைவாங்கும் நாளில் புரியும். அதனால் பெண்களை அவதித்து பேசுவது இது முதல் தடவையல்ல.
இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான மோசமான வார்த்தை பிரயோகங்கள் இந்த சபையில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இதற்கு இடமளிக்க முடியாது.
அதனால் பெண்களை மோசமாக பேசுபவர்களுக்கு என்னிடம் தான் கன்னத்தில் அறைவாங்க நேரிடும்" என்றார்.
இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.