இடைக்கால அரசு எனும் நாடகம் அம்பலமாகிவிட்டது !! - சஜித் காட்டம்
இடைக்கால அரசாங்கம் தொடர்பான நாடகம் அம்பலமாகியுள்ளதாகவும் பதவிகளுக்கு அடிப்பணிந்து மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்றாவது தின பாத யாத்திரை இன்று தங்ஹோவிட்டவில் ஆரம்பமாகியது. இவ் யாத்திரையின் ஆரம்பத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசாங்கம் தற்போது அச்சாறாக மாறியுள்ளது. அச்சாறாக மாறியுள்ள அரசாங்கத்தில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவோ, அதன் பங்காளியாக மாறவோ ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை.
இடைக்கால அரசாங்கம் என்ற நாடகம் பற்றி நான் ஆரம்பத்திலேயே அறிந்து இருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, அதற்கும் மேல் பெரிய பதவியோ எனக்கு ஆபரணம் அல்ல.
பதவிக்கு அடிமையாகி மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை. மக்களின் எதிர்ப்பு மற்றும் கோரிக்கைகளை சலுகைகளுக்காக காட்டிக்கொடுக்கும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடையாது.
நாட்டு மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்.
பணம், சலுகைகளை வழங்கி, அரசாங்கத்தை அமைக்க சிலர் நடவடிக்கை எடுத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அந்த சலுகைகளுக்கு ஏமாந்து விட மாட்டார்கள்.
