அனைத்து அரச நிறுவனங்களிலும் நிறுவப்படும் புதிய பிரிவு
நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சுற்றறிக்கையின் அறிவுறுத்தலுக்கமைய, 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையான தேசிய ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளைப் பெறுவதற்காக இந்த உள்ளக விவகாரப் பிரிவுகள் நிறுவப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சின் கீழ், உள்ளக விவகாரப் பிரிவை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (20) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா (Sampath Thuyacontha) தலைமையில் நடைபெற்றது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு
இத்தகைய ஒரு பிரிவை நிறுவுவதன் முதன்மை நோக்கம், ஊழலைக் குறைத்தல் மற்றும் நிறுவனங்களுக்குள் நேர்மையை மேம்படுத்துதல், ஊழல் அபாயங்களைக் கண்டறிதல், அபாயங்களை மதிப்பிடுதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துதல், செயல்முறை பற்றிய முழுமையான அறிக்கையை ஜனாதிபதி செயலகம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்தல் போன்ற விடயங்களைக் கண்காணிப்பதாகும்.
இந்தப் பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு ஆதரவளிப்பது அனைத்து அரச அதிகாரிகளினதும் முழுப் பொறுப்பாகும் என தெரிவித்தார்.
அத்துடன், எதிர்பார்த்தபடி, திட்டத்தை முறையாக செயற்படுத்துவதன் மூலம் அடையக்கூடிய வெற்றிகரமான முடிவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
