கிளிநொச்சியில் சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச பெண்கள் தினம்! (படங்கள்)
கிளிநொச்சியில் சமத்துவத்தை வலியுறுத்திய சர்வதேச பெண்கள் தினம் "ஆணுக்கு பெண் சரிநிகர் அது நம் சமத்துவம் உணர்" எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி திருநகர் கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் சமத்துவக் கட்சியின் மகளிர் அணி ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சியில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களிலும் அதிகளவு பெண் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரேயொரு கட்சியாக சமத்துவக் கட்சி காணப்படுவதோடு, வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி பெண்களின் உரிமைகள் நலன்களில் செயற்பாட்டு ரீதியாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள கட்சியாகவும் சமத்துவக் கட்சி செயற்பட்டு வருகிறது என நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார்.
கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்களை பலப்படுத்துகின்ற போது அவர்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படும் எனவும் மாறாக சமூகத்தில் பெண்கள் நலிவுற்றவர்களாக காணப்படுகின்ற போது அங்கே பெண்களின் உரிமைகள் மிக மோசமான வகையில் பாதிக்கப்படுகிறது என்றும் நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் மேரி டென்சியா தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






