ஜெய் சங்கரை சந்திக்க அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்
இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்து சமுத்திர எல்லை நாடுகள் சங்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
அவரை உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.
அனுமதி கோரும் தமிழ் கட்சிகள்
கொழும்புக்கு மீண்டும் வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இந்திய இலங்கை உறவுகள் தொடர்ந்தும் முன்னேற்றமடைந்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எஸ்.ஜெய்சங்கர் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
மேலும் நாளை வியாழக்கிழமை திருகோணமலைக்கும் செல்ல உள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா முன்னெடுக்க உள்ள அபிவிருத்தி பணிகள், சீன குடா விமான நிலையத்துக்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது, திருகோணமலை எண்ணெய் குதங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தக்கூடுமென இராஜதந்திரமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கின் ஏனைய கட்சிகளும் தெற்கின் சில தமிழ் கட்சிகளும் எஸ்.ஜெய்சங்கரை சந்திக்க நேரத்தை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.